தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது.
தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 81 தேர்வு மையங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
தேர்வு அறைகளை மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பு, தேர்வு எழுதிய பின்பும் கிருமி நாசினி போட்டு தூய்மைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கிடையே 6 அடி இடைவெளி, தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதனை, தேர்வு அறைகளின் உள் மற்றும் வெளிப்புறங்களில் கிருமி நாசினை வைக்கவும் பள்ளி நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்களுக்கு தனி அறைகள் ஒதுக்கப்பட்டு, பாதுகாப்பு கவச உடை அணிந்த ஆசிரியர்கள் பணியாற்ற அறிவுறுத்தபட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு 3 அடுக்கு முக கவசம் வழங்கவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முக கவசம் அணிவதை கட்டாயம் உறுதிப்படுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.