சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டவர் உயிரிழந்த சம்பவம் கொலை வழக்காக மாற்றப்பட்டு, மறுவாழ்வு மைய ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுப்பழக்கத்துக்கு அடிமையான ராயப்பேட்டையைச் சேர்ந்த ராஜி என்பவர் அதே பகுதியில் உள்ள மெட்ராஸ் கேர் சென்டர் என்ற போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை இரவு ராஜி படியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்து விட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும் எனவே அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் உறவினர்கள் போலீசில் புகாரளித்தனர். விசாரணையில் மறுவாழ்வு மைய ஊழியர்கள் அவரை கொம்பால் கடுமையாகத் தாக்கி, கொதிக்கும் நீரை ஊற்றி, கொடுமைப்படுத்தியது தெரியவந்துள்ளது.
முன்னதாக மறுவாழ்வு மையத்தில் நடக்கும் கொடுமைகள் குறித்து, அங்கு வரும் பார்வையாளர்களிடம் ராஜி கூறியதாகவும் அதனால் அவரைக் கொன்றுவிடுவோம் என மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. கார்த்திகேயனையும் அவரது மனைவி லோகேஸ்வரியையும் போலீசார் தேடி வருகின்றனர்.