கும்பகோணத்தில் வழக்கறிஞர் ஒருவர் குடிபோதையில் பெண் போக்குவரத்துக் காவலரை ஒருமையில் பேசி, அநாகரிகமாக நடந்துகொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
திங்கட்கிழமை மாலை பழைய பாலக்கரை சாலையில் ஒரு தம்பதி தங்களுக்குள் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த வழக்கறிஞர் ராபர்ட் என்பவர், ஏன் சண்டையிடுகிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.
அப்போது அவர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், நீங்கள் யார்? என தம்பதி ராபர்ட்டிடம் கேட்டுள்ளனர். அதற்கு தாம் ஒரு வழக்கறிஞர் என்று கூறி தம்பதியை ராபர்ட் மிரட்டினார் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்தத் தம்பதி அங்கு பணியில் இருந்த போக்குவரத்துப் பெண் காவலரிடம் முறையிட்டுள்ளனர். அவரும் ஏன் இப்படி பேசுகிறீர்கள் ? என்று ராபர்ட்டிடம் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராபர்ட், பெண் காவலரை ஒருமையில் பேசி வம்பிழுத்ததோடு, சட்டை பட்டன்களை கழற்றிவிட்டு அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளார். 'ஆம்பளனு மரியாதை கொடுக்குறேன், இல்லனா அடி பொளந்துடுவேன்' என பெண் காவலர் அவரை எச்சரித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பெண் காவலர் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், வழக்கறிஞர் ராபர்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே போதை தெளிந்த ராபர்ட் பெண் காவலரிடம் மன்னிப்புக் கேட்டதாகக் கூறப்படும் நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.