எதிர்கால போக்குவரத்தில் மின்வாகனங்கள் முக்கியப் பங்காற்றும் என கூறப்படும் சூழலில், அந்த வாகனங்களின் திடீர் தீவிபத்துகளால் அதன் பாதுகாப்பு தொடர்பாக மக்களுக்கு ஐயங்கள் எழுந்துள்ளன. மின் வாகனங்கள் தீ விபத்திற்குள்ளாவதை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
ஆற்றலை சேமிக்கும் பேட்டரியில் மின்சார வாகனங்கள் இயங்கும் நிலையில், லித்தியம் அயன் பேட்டரிகளே தற்போது பயன்பாட்டில் உள்ளன. அண்மை காலமாக பேட்டரிகள் தீவிபத்திற்குள்ளாகும் சூழலில், தொழில்நுட்பத்தை சரியாகவும் கவனமாகவும் கையாள்வதன் மூலமாக இதுபோன்ற இடர்களை தவிர்க்கலாம் என்கிறார் சென்னை ஐஐடி மாணவர் அருண் அபியன்.
தரமான பேட்டரி வாகனங்களை வாங்குவது மற்றும் அதனை கவனமாக பராமரிப்பது ஆகியவை மூலம் இது போன்ற பாதிப்புகளை தவிர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பேட்டரி வாகனங்கள் வாங்கும்போது லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான சர்வதேச தானியங்கி தொழில்நுட்ப மையத்தின் சான்றிதழ் அல்லது யூ.என் 38.3 என்ற தர சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும் என்றும் அருண் அபியான் கூறியுள்ளார்.
மேலும், மின்சார வாகனம் வாங்கும்போது பி.எம்.எஸ் என்றழைக்கப்படும் பேட்டரி கண்காணிப்பு அமைப்பு உள்ள நம்பகமான பேட்டரியா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பிஎம்எஸ் அமைப்பு, பேட்டரியின் செயல்திறன், ஆற்றல் சேமிக்கும் திறன் ஆகியவற்றை கண்காணிப்பதுடன், மின்னழுத்தம், ஷார்ட் சர்க்யூட், அதிக வெப்பநிலை ஏற்படாமலும் பார்த்துக் கொள்கிறது.
வாகன தயாரிப்பு நிறுவனத்தால் ஆங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களில் மட்டுமே பேட்டரிகளை பழுது பார்த்து சரிபார்க்க வேண்டும் என குறிப்பிட்ட அருண் அபியான், வாகனத்தின் சார்ஜ் 25 முதல் 85% வரை இருக்கும் வகையில் வாகனத்தை இயக்க வேண்டும் என்றும், 90%-க்கு மேல் அதிக சார்ஜ் செய்வது அல்லது 15%-க்கு கீழே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல், வாகனத்தில் சார்ஜ் செய்ய பயன்படும் சார்ஜிங் அவுட்லெட் பகுதி பழுதடையாமல் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, விடுமுறைக்காக வெளியூர் செல்லும் பொழுது அல்லது நீண்ட காலமாக வாகனத்தைப் பயன்படுத்தாத சூழல் வரும் போதும் பேட்டரி 30% என்ற அளவில் இருப்பதை கவனத்தை கொள்ள வேண்டும் என்றும் வாகனத்தை சூரிய ஒளியில் நீண்ட நேரம் நிறுத்தி வைத்திருக்காமல் நிழலில் நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாகனத்தின் பேட்டரி டெர்மினல்கள் சேதமடைந்தாலும் தீப்பிடிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாகனத்தின் பேட்டரி வெப்பமடைவது போல் உணர்ந்தால், உடனடியாக வாகனத்தை அருகில் உள்ள எரியக்கூடிய பொருட்கள் இல்லாத இடத்தில் நிறுத்த வேண்டும் என்றும் எதிர்பாராதவிதமாக வாகனம் தீப்பிடித்தால், சுயமாக தீயை அணைக்க முயற்சிக்காமல், அவசர சேவைகளை அழைக்க வேண்டும் என்றும் ஐஐடி மாணவர் அருண் அபியான் கூறியுள்ளார்.
லித்தியம் அயன் பேட்டரியில் பற்றிய தீ அணைந்தாலும் அதுவே தானாக மீண்டும் தீப்பற்றிக்கொள்ள வாய்ப்புள்ளதால், குறிப்பிட்ட நேரம் வரை வாகனத்தின் அருகில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.