குழந்தைகளுக்கு வாழ்க்கையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய தாயே தனது குழந்தைகள் முன்பு பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடிக்க முயன்றதோடு, தனது மகன்களையே வீடியோ எடுக்க வைத்த விபரீத சம்பவம் கள்ளக்குறிச்சி அருகே அரங்கேறி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் ஈரியூர் என்ற கிராமத்தில் 10 -க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர்கள் குடும்பத்தினர் புறம்போக்கு தரிசு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அங்கு குடியிருக்கும் ரமேஷ் என்பவருக்கும் அவரது பெரியப்பா மகன் ஐயப்பன் என்பவருக்கும் இடையே வீட்டிற்கு செல்லும் வழித்தடம் சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ரமேஷ் ஐயப்பன் மீது அருகிலுள்ள கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். விசாரணை மேற்கொண்ட போலீசார் , புறம்போக்கு தரிசு நிலத்தில் குடியிருப்பதால் பிரச்சனை இல்லாமல் அந்த இடத்தினை இரண்டு தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
27 ந்தேதி அய்யப்பன் உள்ளிட்ட இருவர் தாங்கள் வசிக்கும் பகுதியை சுற்றி முள்வேலி போட்ட நிலையில் , பதிலுக்கு ரமேஷும் வழியை மறித்து வேலி அமைத்துள்ளார் அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் 3 பேர் சேர்ந்த ரமேஷ் அமைத்த வேலியை பிடுங்கி போட்டதோடு, ரமேஷையும் அவரது மனவி அம்சாவையும் தாக்கியதாக கூறப்படுகின்றது.
இதனால் மனமுடைந்த அம்சா , வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து அதனை தனது இருமகன்களை வைத்து வீடியோ எடுக்க வைத்துள்ளார். விபரீத முடிவெடுத்து விஷம் குடிக்கும் அம்மாவை ஒரு சிறுவன் ஓடிச்சென்று தடுப்பதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது
அதன் தொடர்ச்சியாக இரண்டு மகன்களின் வாயிலும் விஷத்தை ஊற்றிய விபரீத தாய் அம்சா, சிறுவர்கள் இருவரும் கதறி அழுவதையும், வீடியோவாக பதிவு செய்துள்ளார்
குழந்தைகளுடன் , தான் விஷம் குடித்த சம்பவத்தை தனது கணவர் ரமேஷுக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ந்து போன ரமேஷ் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து விஷம் குடித்திருந்த தனது மனைவி மற்றும் மகன்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சையில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கீழ்குப்பம் காவல் நிலைய போலீசார் விஷம் குடித்த அம்சாவிடம் வாக்குமூலம் பெற்று, அம்சாவை தாக்கிய புகாருக்குள்ளான ஐயப்பன், அவரது மனைவி மணிமேகலை , பெரியசாமி, ஆகாஷ் துரை ஆகிய நான்கு பேர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாழ்க்கையில் சவால்களை சந்திக்கவும், பிரச்சனைகளை சமாளிக்கவும் குழந்தைகளுக்கு, பெற்றோர் தான் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் அதை விடுத்து விஷம் குடிப்பது போன்று நடிப்பது எல்லாம் வில்லங்கத்தை ஏற்படுத்தி விடும் என்பதை விபரீத தாய் உணரவேண்டும்..!