பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி மீதான செஸ் மற்றும் மேல் வரி விதிப்பதை நீக்கிவிட்டு 2014ஆம் ஆண்டில் இருந்ததுபோல வரிவிதிப்பைக் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்குத் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைத் தமிழ்நாடு, உள்ளிட்ட மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என முதலமைச்சர்களுடனான கலந்துரையாடலின்போது நேற்றுப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்துத் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விடுத்துள்ள அறிக்கையில், 2021 ஆகஸ்டிலேயே தமிழக அரசு பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துள்ளதாகவும், அதனால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு 1160 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2021 நவம்பர் மூன்றாம் நாளில் மத்திய அரசு பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் அதன் பங்காகத் தமிழக அரசுக்குக் கிடைக்க வேண்டிய ஆண்டுவருவாயில் 1050 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு உற்பத்தி வரியைக் குறைத்த பின்னும் இப்போதுள்ள தொகை 2014ஆம் ஆண்டில் உள்ளதைவிட அதிகமாகவே உள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் பெட்ரோல் மீது லிட்டருக்கு 22 ரூபாய் 54 காசுகளும், டீசல் மீது லிட்டருக்கு 18 ரூபாய் 45 காசுகளும் மதிப்புக் கூட்டு வரியாக விதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சரக்கு சேவை வரி விதிப்பால் மாநில அரசு வரி வருவாயை இழந்துள்ளதாகவும், கொரோனா சூழல் நிதிச்சுமையை மேலும் அதிகரித்துள்ளதாகவும், சரக்கு சேவை வரி இழப்பீடு வழங்கும் காலம் ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வர உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு உற்பத்தி வரி மீதான ஒதுக்கு, மேல் வரி ஆகியவற்றைக் குறைப்பதுடன், அவற்றை வரியுடன் இணைத்துவிட்டால் மாநில அரசுகளுக்குச் சரியான பங்கு கிடைக்க வழி ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வரிகள் தொடர்ந்து அதிகமாக இருப்பதால், மாநில அரசு வரிகளை மேலும் குறைப்பது நியாயமானதும், சாத்தியமானதும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.