திருப்பூரில் பழைய வீட்டிற்குள் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த கருப்பு பணத்தில் இருந்து 2 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை 3 தவணைகளாக திருடிச்சென்ற கட்டிட மேஸ்திரி தலைமையிலான களவாணிக் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கருப்பு பணம் பதுக்கிய தொழில் அதிபர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்படும் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
திருப்பூர் மாவட்டம் குள்ளேகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் துரைசாமி. பின்னலாடை நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் துரை சாமி பிரமாண்டமான வீட்டில் வசித்து வந்தாலும் தனது வீட்டிற்கு எதிரே உள்ள தனக்கு சொந்தமான பழைய வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 சவரன் நகை, ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் பத்திரங்களின் நகல்கள் திருட்டு போனதாக கடந்த ஜனவரி மாதம் 3ஆம் தேதி திருப்பூர் மத்திய போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில் அந்த பழைய வீட்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு திருவண்ணாமலையைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சதீஷ் என்பவர் தனது கையாட்களுடன் 2 ஆண்டுகளில் 3 முறை வந்து சென்றது தெரியவந்தது. வறுமை நிலையில் இருந்த மேஸ்திரி சதீஷ், அவனது தம்பி சக்தி, தொழிலாளர்கள் தாமோதரன் மற்றும் ராதாகிருஷ்ணன்ஆகியோர் திடீர் செல்வந்தர்களாக மாறி சொந்த வீடு, கார், பைக் என்று சொகுசாக வாழ்ந்து வருவது குறித்து விசாரித்தபோது பல்வேறு திருக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
தொழில் அதிபர் துரைச்சாமியின் பழைய வீட்டை சுற்றி கடந்த 2020ஆம் ஆண்டு சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்றபோது சதீஷ் உள்ளிட்ட 4 பேரும்தான் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர். துரைசாமியும் அவரது மனைவியும் இந்த பணியை மேற்பார்வையிடச் செல்லாமல் தங்களது புது வீட்டிலேயே இருந்துள்ளனர். இதனால் 4 பேரும் பழைய வீட்டுக்குள் சகஜமாக சுற்றித் திரிந்துள்ளனர்.
அப்போது ஒரு அறையில் வெள்ளைத் துணியில் மூடப்பட்ட நிலையில் கட்டுக்கட்டாகப் பணம், மற்றும் நகைகள் இருப்பதை பார்த்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கட்டிடப் பணியாளர்கள் 4 பேரும் தங்களால் எடுத்து செல்லும் அளவுக்கு பணம் மற்றும் நகைகளை மூட்டையாகக் கட்டி 3 தவணைகளாக சொந்த ஊருக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அப்படி திருடிச் சென்ற பணத்தில் ஆளுக்கொரு வீட்டையும், புதிய கார் மற்றும் பழைய கார், புல்லட், பைக், தங்கள் வீட்டு பெண்களுக்கு தங்க ஆபரணங்கள் போன்றவற்றை வாங்கியுள்ளனர். மிச்சமிருந்த பணத்தை சொகுசாக செலவு செய்து, 'ஜாலி'யாக ஊர் சுற்றி வந்ததாக காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
மேஸ்திரி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 30 சவரன் நகைகள் மற்றும் 16 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், இரண்டு கார்கள் மற்றும் நான்கு வீட்டு பத்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
தொழிலதிபர் துரைசாமி தான் கணக்கில் காட்டாமல் கிடைக்கும் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை கணக்கு வழக்கில்லாமல் பதுக்கி வைத்ததால் எவ்வளவு பணம் உள்ளது என்பது தனக்கு தெரியவில்லை என்று கூறியதால், காவல்துறையினரின் தகவலின் பேரில், இன்னும் எவ்வளவு பணம், நகைகளைக் கணக்கில் காட்டாமல் துரைசாமி மறைத்து வைத்துள்ளார் என்று அவரது வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனையைத் தொடங்கியுள்ளனர்.