தஞ்சாவூரில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரிக்க, ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், 11 பேரை பலி கொண்ட சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்திலுள்ள அப்பர் கோவிலில் பாரம்பரியமாக 93 ஆண்டுகளாக நடைபெற்று வரும் தேர் திருவிழா இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் துவங்கியது.
ஊர்வலமாக சென்ற தேர் கோவிலை நெருங்கிக் கொண்டிருந்த போது, ஒருவீட்டில் தேங்காய் உடைத்து தேருக்கு வழிபட்டுள்ளனர்.
வழிபாடை முடித்துக் கொண்டு அப்பர் மடத்திற்கு செல்ல தேர் திரும்பிய போது, தேருக்கு பின்னால் பொருத்தப்பட்டிருந்த ஜெனரேட்டர் சாலையில் இருந்து விளிம்பில் கீழே இறங்கியது. ஜெனரேட்டரை சாலைக்கு ஏற்ற முயன்ற போது தேர் சாய்ந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, தேரின் உச்சியில் இரும்பு கம்பி மீது செய்யப்பட்டிருந்த அலங்கார வளைவு மேலே சென்ற உயர்மின்னழுத்த கம்பி மீது உரசியது.
விபத்துக்குள்ளான தேரின் மீது அலங்காரம் மட்டுமே சுமார் 20 அடி உயரத்திற்கு மின் விளக்குகளாலும், பூக்களாலும் செய்யப்பட்டிருந்த நிலையில், முதலில் இரும்புக் கம்பி மீது பாய்ந்த மின்சாரம், தேர் முழுவதும் கம்பிகள் வழியாக பாய்ந்துள்ளது.
இதனையடுத்து, தேரை வடம்பிடித்து இழுத்தவர்கள் ஆளுக்கொரு பக்கம் தூக்கிவீசப்பட்டனர். இது ஒருபுறமிருக்க, மின்னழுத்த கம்பியில் உரசியதும் தீப்பொறி கிளம்பி சட்டென தேர் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. மின்சாரம் பாய்ந்ததில் பலர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்ததால், சற்று நேரத்தில் திருவிழா களம், போர்க்களம் போல் காட்சியளித்தது.
தேரை வரவேற்க சாலையிலும் பொதுமக்கள் தண்ணீர் ஊற்றியிருந்த நிலையில், அதிலும் மின்சாரம் பாய்ந்து, ஆங்காங்கே நின்றிருந்தவர்களும் தூக்கிவீசப்பட்டனர்.
இந்த விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் மின்சாரம் தாக்கியும், தீயில் உடல் கருகியும் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 15-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்ததோடு, இழப்பீடும் அறிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது.
தங்களிடம் முன் அனுமதி பெறாமலேயே திருவிழா நடந்ததாகவும்,தேருக்கு மேலே செய்யப்பட்டிருந்த அலங்காரம் அதிக உயரம் கொண்டிருந்ததாலும், அதனை யாருமே கவனிக்காததாலும் தான் மின்னழுத்த கம்பி மீது உரசி விபத்து ஏற்பட்டுவிட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விபத்து குறித்து விசாரிக்க வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், திருவிழா நடந்தது குறித்து அரசுக்கு எந்த தகவலும் வரவில்லை எனவும், ஊர்மக்களே ஒன்று கூடி திருவிழாவை நடத்தியிருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதனிடையே தஞ்சாவூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சம்பவம் நிகழ்ந்த இடத்தை நேரில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தமிழக அரசின் நிவாரணத் தொகையான தலா 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.மருத்துவமனைக்கு சென்றவர் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண உதவித் தொகையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், வருங்காலத்தில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
தேர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 11 பேரில் 7 பேருடைய உடல்கள் களிமேட்டில் ஒரே இடத்தில் வைத்து எரியூட்டப்பட்டன. இருவருடைய உடல்கள் அந்த ஊரிலேயே அடக்கம் செய்யப்பட்டன. இருவரின் உடல்கள் பரிசுத்த நகரில் அடக்கம் செய்யப்பட்டன.