சென்னை அருகே பணம் கேட்டு கடத்திய கும்பலிடம் இருந்து பென்ஸ் காரின் சென்சார் கருவியால் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை ஜெ.ஜெ.நகர் முகப்பேரை சேர்ந்த 29 வயதான ராபின் ஆரோன் ஏ.ஆர்.டி. என்ற பெயரில் 3 நகைக்கடைகளையும், 39 அடகு கடைகளையும் நடத்தி வருகிறார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் 40 வது அடகுகடையை திறந்து வைத்து விட்டு, பென்ஸ் காரில் சென்னைக்கு திரும்பினார்.
புழல் காவல் நிலையம் அருகே வந்தபோது மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த 7 பேர், காரை வழிமறித்து, கொருக்குப்பேட்டை போலீசார் என்றும் கைது வாரண்ட் உள்ளதாகவும் கூறி,ராபின் ஆரோனை, தங்களது இரு சக்கர வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அந்த கும்பலைச் சேர்ந்த 4 பேர், ராபினின் காரை ஓட்டிச் செல்ல முயன்றனர்.
ஆனால், சென்சார் அடங்கிய காரின் சாவியை உள்ளே வைத்திருந்தால் மட்டுமே இயக்கும் வசதி கொண்டது என்பதால், அந்த வாகனத்தை இயக்க முடியவில்லை. இதனால், பைக்கில் சென்ற தங்கள் கூட்டாளிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கும்பல், ராபினை மீண்டும் அழைத்து வருமாறு தெரிவித்தனர்.
இதனால் பைக்கில் அழைத்துச் சென்ற கும்பல் ராபினை மீண்டும், கார் நின்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர். புழல் சந்திப்பில் வாகன நெரிசலால், அந்த கும்பலின் மோட்டார் சைக்கிள் செல்ல முடியாமல் நின்றதை பயன்படுத்தி, அவர்களிடம் இருந்து தப்பிய ராபின், அங்கிருந்த போக்குவரத்து காவலரிடம் ஓடிச் சென்று முறையிட்டார்.
இதனை கண்டதும், பைக்கில் வந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதனிடையே புழல் காவல் நிலையத்தில் இதுகுறித்து ராபின் கொடுத்த புகாரின் பேரில், போலீசார், 3பிரிவுகளில் வழக்கு பதிந்து 7பேரை பிடிக்க, அங்குள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுக்கள் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளனர்.