அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில், துப்புத் துலங்கியுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விட முடியும் என்றும் தமிழகக் காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2012 மார்ச் 29ஆம் நாள் காலையில் நடைப்பயிற்சிக்குச் சென்ற ராமஜெயம் வெட்டிக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக சிபிசிஐடி, சிபிஐ ஆகியன விசாரித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், வழக்கைக் காவல்துறையே விசாரிக்கக் கோரி ராமஜெயத்தின் சகோதரர் மனு தாக்கல்செய்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவையடுத்துத் தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் நிலை அறிக்கையைத் தமிழக அரசின் வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அப்போது, கொலை நடந்தபோது பணியில் இருந்த 6 காவலர்கள் உட்பட 198 சாட்சிகளை விசாரித்துள்ளதாகவும், உயர் அதிகாரிகளையும் விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். கொலை வழக்கில் விசாரணை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதி, வழக்கை ஜூன் 10ஆம் நாளுக்குத் தள்ளிவைத்தார்.