திருப்பூரில் இறந்த ஒருவரின் உடலை கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்வது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், உடலை நடு ரோட்டில் வைத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெருந்தொழுவு பகுதியில் வயது மூப்பு காரணமாக காலமான ஞானப்பிரகாசம் என்பரது உடல் அருகில் உள்ள கரட்டுபுதூர் ரோடு கல்லறை தோட்டத்திற்கு ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது.
அப்போது, அங்கு வந்த மற்றொரு பிரிவினர் அந்த கல்லறை தோட்டத்தில் அவரது உடலை புதைக்க அனுமதி இல்லை என வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் பெருந்தொழுவு நால்ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் இருதரப்பினரிடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அதே கல்லறை தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.