நுழைவுக் கட்டணம் வசூலிப்பது குப்பை கிடங்கிற்குள் நுழையவா? என மாமல்லபுரம் பேருராட்சியிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மாமல்லபுரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள், பக்கிங்ஹாம் கால்வாயில் கொட்டப்பட்டு, கால்வாய் பகுதி குப்பை பிரிக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக வழக்கு தொடரப்பட்டது.
இதன் விசாரணையில், விதிமீறல் தொடர்பாக மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அதிகாரிக்கு எதிராக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது.
இதனை அடுத்து, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், முறையாக பராமரிக்காதது துரதிருஷ்டவசமானது என்று அதிருப்தி தெரிவித்தனர். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரியை தண்டிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.