மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய வாட்டர் ஆப்பிளை தர்மபுரி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் சாகுபடி செய்து விற்பனை செய்து வருகிறார்.
பாப்பாரப்பட்டி அருகே திகிலோடு கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியராக தற்காலிகமாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு விவசாயத்தில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் ஒசூரிலுள்ள நர்சரி ஒன்றில், நூறு வாட்டர் ஆப்பிள் செடிகளை வாங்கி வந்து தங்களுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் அரை ஏக்கர் பரப்பளவில் நட்டு வளர்த்துள்ளார்.
இந்த ஆப்பிள் செடி 2 வருடங்களிலேயே அறுவடைக்கு வந்து விடுவதாகவும், வருடத்தில் மூன்று முறை விளைச்சல் கிடைக்கிறது என்றும் சரவணன் தெரிவித்தார்.
சிகப்பு மற்றும் பச்சை நிறம் கொண்ட 2 வகையான வாட்டர் ஆப்பிளை தனது தோட்டத்தில் நடவு செய்துள்ளதாக தெரிவிக்கும் சரவணன், வருடத்திற்கு 2 லட்ச ரூபாய் அளவிற்கு வருமானம் ஈட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.