நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர் 27 வயது இளைஞர் போன்ற வேகத்துடன் சென்னை மணலி புது நகரில் அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகின்றார். தற்காப்பு கலை நுனுக்கங்களை மாணவிகள் கற்க வேண்டியதன் அவசியம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் டேவிட். இவர் சென்னை மணலிபுது நகரில் பேரின்பம் சிலம்ப கலைக்கூடம் ஒன்றை கடந்த 7 வருடமாக நடத்தி வருகிறார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் விதமாக தற்காப்புகலைகளையும் கற்றுக்கொடுத்து வருகிறார்.
குறிப்பாக அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பக் கலையை கற்றுக் கொடுத்து வருகிறார். சுமார் 7 வருடங்களாக இந்த சேவையை செய்து வரும் டேவிட் தாத்தா, தனது சிஷ்யப்பிள்ளைகளின் திறமையை ஊருக்கு காட்டும் விதமாக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்
அரசு பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவியர் கலக்கலாக கம்பு சுற்றி அசத்தினர். சிறப்பாக சிலம்பம் சுற்றியவர்களுக்கு தொகுதி எம்.எல்.ஏ துரை சந்திர சேகர் , கவுன்சிலர் நந்தினி சண்முகம் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.
பல வருடங்களாக அந்த பகுதியில் கடை நடத்தி வந்த டேவிட் தாத்தா, தனியாக செல்லும் பெண் குழந்தைகள் தங்களுக்கு எந்த ஆபத்து வந்தாலும் துணிச்சலுடன் எதிர் கொள்ள ஏதாவது ஒரு தற்காப்பு கலையை கற்றுக் கொள்வது அவசியம் என்பதை உணர்ந்ததால், தனக்கு தெரிந்த சிலம்ப கலையை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் விரும்பினால் இதனை அனைத்து பள்ளிகளுக்கும் சென்று கற்றுக்கொடுக்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.