சென்னை அடுத்த மதுரவாயலில் தனது காரைத் தானே தீ வைத்து எரித்து விட்டு மர்ம நபர்கள் எரித்து விட்டதாக நாடகமாடிய பாஜக மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளூர் மேற்கு பாஜக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமாரின் காரை மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றித் தீவைத்து எரித்துவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அச்சம்பவம் தொடர்பான சிசிடிவிக் காட்சிகள் வெளியானது.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதில், சதீஷ்குமாரே காரைத் தீவைத்து எரித்துவிட்டுப் பிறர் எரித்ததாக நாடகமாடியது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்ட நிலையில் காரை விற்று நகை வாங்கித் தரும்படி மனைவி தொடர்ந்து தொந்தரவு செய்ததால் மன உளைச்சலில் காரை எரித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சதீஷ்குமாரை ஜாமீனில் விடுவித்த காவல்துறையினர் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.