இன்ஸ்டாகிராம் மூலம் பழகி கல்லூரி மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள , நகை, பணம் பறித்த களவாணி காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை பழவந்தாங்கலைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு தனது பெற்றோருடன் சென்று புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் தன்னிடம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான திருச்சி கள்ளர் தெருவைச் சேர்ந்த விஸ்வா என்ற இளைஞர் தன்னை காதலிப்பதாக கூறி தன்னிடம் பழகி வந்ததாகவும், அதன் பிறகு தன்னை ஏமாற்றி ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி தன்னிடம் இருந்த 25 பவுன் தங்க நகைகள், இரண்டரை லட்ச ரூபாய் ரொக்கம், மடிக்கணினி, 80 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் ஆகியவற்றை பறித்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் சியாமளாதேவி வழக்குப்பதிவு செய்து விஷ்வாவை பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
இன்ஜினியரிங் EEE படித்துள்ள விஸ்வா வேலையில்லாமல் இருந்த நிலையில் அங்கிருந்த கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றில் தற்காலிகமாக வேலைக்கு சேர்ந்துள்ளான். ஆயினும் அந்த வேலை பிடிக்காமல் அந்த வேலையை விட்டு விட்டு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க யோசித்த அவன், இன்ஸ்டாகிராமில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களுடன் பழகி அவர்களை காதல் வலையில் வீழ்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் தன்னிடம் பழகும் பெண்களிடம் பாசத்தை கொட்டி, பசப்பு வார்த்தைகளை பேசி, தன்னுடைய மன்மத பேச்சால் மயக்கி அடிபணிய வைத்து விடுவது இவனுக்கு கை வந்த கலையாக இருந்துள்ளது.
அவ்வாறு தன் வலையில் வீழ்த்திய பெண்களை திருச்சி முக்கொம்பு சுற்றுலா தளத்திற்கு அழைத்துச் சென்று அத்துமீறலில் ஈடுபட்டு, அதை வீடியோவாக பதிவு செய்து வைத்துக் கொள்வது வழக்கம் என சொல்லப்படுகிறது.
ஒருகட்டத்தில் அந்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும், பெற்றோர்களிடம் காண்பித்து விடுவேன் என்று மிரட்டி மாணவிகளிடமிருந்து பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொள்வது இவனது வாடிக்கை என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதன்பின்னர், விஸ்வா பயன்படுத்தி வந்த லேப்டாப் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை ஆராய்ந்தனர்.
அதில் 30க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், வசதியான வீட்டு இளம் பெண்களிடம் இன்ஸ்டாகிராமில் பழகும் போது அவர்களுடைய படிப்பு, வசதி, குடும்பப் பின்னணி போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு குறிப்பாக பெற்றோரின் அன்பு, அரவணைப்பு இல்லாத மாணவிகளிடம் ஆதரவாக பேசியும் அன்பாக பழகியும் அவர்கள் மனதில் இடம் பிடிக்கும் விஸ்வா, அவர்களை நேரில் பார்க்க வேண்டும் என ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று காதல் வலையில் வீழ்த்தி ஒரு கட்டத்தில் எல்லையை மீறியதும், அந்த பெண்களை செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அதை வைத்து மிரட்டி நகைகள் மற்றும் பணம் பறித்து வந்ததும் உறுதியானது.
இதன்பின்னர் விஸ்வா மீது 406, 420 ஆகிய இரு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.