சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக விசிக - பா.ஜ.க.வினர் இடையே ஏற்பட்ட கைகலப்பில் மூன்று பேருக்கு மண்டை உடைந்தது.
விசிக தலைவர் திருமாவளவன் மாலை அணிவிக்க வந்த போது, அக்கட்சியினர் அம்பேத்கர் சிலையைச் சுற்றி கட்சி கொடியை கட்டியிருந்தனர்.
பின்னர், சிறிது நேரத்திலேயே பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் அங்கு வரவிருந்ததால், விசிக கட்சி கொடிகளுக்கு அருகே தங்களது கட்சிக் கொடியை பா.ஜ.க.வினர் கட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், கொடியை அகற்றக் கூறி விசிகவினர் பா.ஜ.க.வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவே இருதரப்பினர் இடையே கைகலப்பு உருவாகி, பரஸ்பரம் கற்களைக் கொண்டு தாக்கிக் கொண்டனர்.
குறைந்த அளவிலான போலீசாரே பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில், அவர்களும் தங்களது முழு பலத்தையும் பிரயோகித்து கலவரத்தை கட்டுப்படுத்த முயன்றனர். இதனால், தள்ளுமுள்ளு உருவானது.
ஆள் ஆளுக்கு கட்சிக் கொடிகளை கிழித்து தூக்கி எறிந்தனர். பின்னர் இருதரப்பினரும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இருதரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் காவலர்களும் காயமடைந்துள்ள நிலையில்,
மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி இரு தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.