மதுரை சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை கைலாசாவில் இருந்து லைவில் நித்தியானந்தா கண்டுகளித்த நிலையில், இங்குள்ள ஆசிரமம் முன்பு கையில் தட்டுடன் பெண்கள் சாப்பாட்டுக்கு முண்டியடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
மதுரையில் சித்திரை திருவிழா களைகட்டி உள்ள நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு கோபுரம் சன்னதி வீதி அருகே உள்ள நித்தியானந்தாவின் சியாமளா பீட ஆசிரமத்தில் பக்தர்களை கவர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இங்கு 10க்கும் மேற்பட்ட சீடர்கள் இருந்து பூஜைகள், நடத்துவதோடு ஆன்லைனில் கைலாசாவில் இருந்தபடியே நித்தியானந்தாவின் லைவில் சத்சங்கம் செய்கின்றார்.
இந்த நிலையில் தியான பீடம் வழியாக சுவாமியும், அம்பாளும் திருவிழா நாட்களில் வீதியுலா செல்லும் போது தியான பீடத்தில் வைக்கப்பட்டிருந்த LED திரையில் திடீரென தோன்றிய, நித்யானந்தா , மீனாட்சி சுந்தரேசுவரரை தரிசனம் செய்தார். தொடர்ந்து சத்சங்கம் செய்யும் காட்சிகளும் திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தா கைலாச நாட்டில் இருந்தபடியே சித்திரை திருவிழாவை நேரடியாக கண்டுகளிக்க வசதியாக, மதுரை சியாமளா பீடம் இந்த நேரலை வசதியை ஏற்படுத்தி இருப்பதாக ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
மறுபுறம் நித்தியின் ஆசிரமம் சார்பில் அறுசுவை உணவுகள் பிரசாதமாக வழங்கப்படும் தகவல் அறிந்ததும், அங்கிருந்தவர்கள், தட்டுவாங்குவதற்காக போட்டி போட்டுக் கொண்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
கையில் தட்டு கிடைத்ததும் , அந்த சாப்பாட்டை வாங்குவதற்காக லைனில் முண்டியடித்தது பெண் பக்தர்களின் கூட்டம்.
வம்பு இருக்கோ..வழக்கு இருக்கோ....? கேடியோ, தாடியோ ...? தங்களுக்கு சாப்பாடு தான் முக்கியம் என்ற கூட்டத்தால் நித்தியின் ஆசிரமம் எந்தவித சிரமமுமின்றி சித்திரை திருவிழாவில் களைகட்டி வருகின்றது.