"பப்ஜி" விளையாட்டுக்கு அடிமையாகி மனதளவில் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன், அரை மயக்கத்தில் அந்த விளையாட்டை விளையாடுவது போன்றே பாவனைகள் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த 17 வயதான அந்தச் சிறுவனை கடந்த திங்கட்கிழமை இரவு மாவட்ட தலைமை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அரை மயக்கத்தில் இருந்த சிறுவன், துப்பாக்கி சுடுவது உட்பட பப்ஜி விளையாட்டு விளையாடும்போது செய்யும் பாவனைகளை செய்தவாறே இருந்தான்.
தொடர்ந்து செல்போனில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட பிரச்சனை என்று கூறப்படும் நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட சிறுவனை மறுநாள் காலை யாரிடமும் சொல்லாமல் பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவன் குறித்து விசாரித்து வருவதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.