விழுப்புரம் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10 ஆண்டு காலம் செய்து தர வேண்டிய திட்டங்களை பத்தே மாதங்களில் செய்துக்கொடுப்பட்டதாக கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த ஒழுந்தியாம்பட்டில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற 38 திட்டப்பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பத்தாயிரத்து 722 பயனாளிகளுக்கு 42 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த பத்து மாத கால திமுக ஆட்சி சிறப்பாக உள்ளதாக தாய்மார்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும், இது போன்ற சாதனைகள் தொடரும் என்றும் கூறினார்.
அனைத்து சமூக மக்களும் ஒரே இடத்தில் ஒற்றுமையாக வசிக்கும் சமத்துவபுரம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளதாகவும், அனைத்திலும் முன்னோடியாக இருக்கும் தமிழ்நாடு, சமத்துவபுரத்திலும் முன்னோடியாக உள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
2011ஆம் ஆண்டுக்குப் பின் கைவிடப்பட்ட அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகக் கட்டடங்களும் மீண்டும் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.
மேலும், 10 ஆண்டு கால ஆட்சியில் செய்ய முடியாதவற்றை கடந்த 10 மாதங்களில் செய்து காட்டி சாதனை படைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.