திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே தனியார் மருத்துவமனை கழிவறையில் பச்சிளங்குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்திப்பேடு பகுதியில் இயங்கி வரும் எம்.எம்.ஆர்.வி. என்ற தனியார் மருத்துவமனையின் கழிவறைக்குள் மேலே சிலாப்பில் பச்சிளங்குழந்தை சடலமாக இருப்பதாக நோயாளிகள் சிலர் மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியிருக்கின்றனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், எறும்பு மண்டி போய் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகே குழந்தை இறப்பிற்கான காரணம் தெரியவரும் எனக் கூறியுள்ள போலீசார், குழந்தையை கொண்டு வந்து கழிவறையில் போட்டுச் சென்றது யார்? என தீவிரமாக விசாரணை நடத்தி வருவதோடு, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.