திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மினி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரும் பேருந்தும் தீ பிடித்து எரிந்தது.
காதணி விழாவிற்காக மினி பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் சென்ற மினி பேருந்து, படியூரை அடுத்த கைகாட்டி என்ற இடம் அருகே எதிரே வந்த சான்ட்ரோ கார் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த சம்பவத்தில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.
விபத்து நடந்தவுடன் மினி பேருந்தில் இருந்தவர்கள் உடனடியாக இறங்கியதால் உயிர் தப்பினர். ஆனால் பலத்த காயமடைந்த சான்ட்ரோ கார் ஓட்டுனர் தீயில் கருகி உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த காங்கேயம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.