கணவரிடம் கடன் வாங்கி பைனான்ஸ் தொழில் செய்து வந்தவரின் காதல் வலையில் விழுந்த பெண் ஒருவர், சொத்துக்காக கணவரையும் மாமியாரையும் கூலிப்படை வைத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அடுத்த எரியோடு, குருக்களையம் பட்டியை சேர்ந்தவர் சவுந்தரம்மாள், இவரது மகன் செல்வம். தோட்டம், சொத்து ஆடு-மாடுகள் என ஏராளமான வசதிகள் இருந்தாலும் செல்வம் கொத்தனார் வேலைக்கு சென்றும் பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு தாய் தந்தையை இழந்து உதவிக்கு ஆள் இன்றி நிர்கதியாக தங்கையுடன் தவித்து வந்த உறவுக்கார பெண்ணான சுபஹரினி என்பவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து சவுந்தரம்மாள் அடைக்கலம் கொடுத்துள்ளார்.
வயதுக்கு வந்த பெண்ணுக்கு நிரந்தர பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக சுபஹரினியை தனது மகன் செல்வத்துக்கு திருமணம் செய்து வைத்து மருமகளாகவும் ஆக்கிக் கொண்டார்.
செல்வம்-சுபஹரினி தம்பதிக்கு ஒரு ஆண்குழந்தை உள்ள நிலையில் 12ஆம் வகுப்பு வரை படித்த தனது மனைவியை அவரது விருப்பப் படி கல்லூரிக்கு அனுப்பி மேற்படிப்பு படிக்க வைத்தார் செல்வம்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்த மர்மகும்பல் செல்வத்தையும், சவுந்தரம்மாளையும் கொடூரமாக வெட்டி கொலை செய்து தப்பிச்சென்றது.
சம்பவம் தொடர்பாக விசாரணையை முன்னெடுத்த போலீசார் , செல்போன் சிக்னல் மூலம் எழுந்த சந்தேகத்தின் பேரில் செல்வத்தின் மனைவியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் இரட்டை கொலைக்காண பின்னணி அம்பலமானது.
கல்லூரிக்கு சென்ற சுபஹரினி தன்னை திருமணமாகாத பெண்ணை போல காட்டிக் கொண்டுள்ளார். கோடி கோடியாக சொத்து இருந்தாலும் தன் அளவிற்கு கணவன் அழகில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்துள்ளது.
தன் மீதும் குழந்தையின் மீதும் அளவற்ற பாசம் வைத்திருந்த கணவனுடன் சேர்ந்து உறங்குவதை கூட சுபஹரினி வெறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தனது தூரத்து உறவு முறையில் தம்பியான கோபி கிருஷ்ணன் மீது உண்டான முறையற்ற காதலால், அவனை தனது வீட்டிற்கு வரவழைத்து கணவரிடம் இருந்து கடனாக 7 லட்சம் ரூபாய் பெற்றுக் கொடுத்துள்ளார். அந்த பணத்தை உள்ளூரில் வட்டிக்கு விட்ட கோபி கிருஷ்ணன் மைனர் போல சுற்றிவந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் தனது கணவரையும், மாமியாரையும் கொலை செய்து விட்டால் மொத்த சொத்துக்களும் தனது பெயருக்கு வந்துவிடும், காதலனுடன் ஜாலியாக வாழலாம் என்று விபரீத கணக்குப் போட்டுள்ளார் சுபஹரிணி. அதன்படி தனது காதலனிடம் வட்டிக்கு பணம் பெற்று போதைக்கு அடிமையான வடமதுரையை சேர்ந்த இரண்டு 11ஆம் வகுப்பு மாணவர்களிடம் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக கூறி தனது கணவர் மற்றும் மாமியாரை கொலை செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.
சம்பவத்தன்று தனது கணவருக்கு பாலில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்த சுபஹரினி அவர் தூங்கியதும் செல்போன் மூலம் காதலன் கோபி கிருஷ்ணாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
நள்ளிரவு 12:30 மணிக்கு கதவை திறந்து விட்டதால் உள்ளே புகுந்த கூலிப்படையினர் சத்தம் கேட்டு விழித்த சவுந்தரம்மாளை முதலில் வெட்டிக் கொலை செய்துள்ளனர். அடுத்ததாக அசைவற்று கிடந்த செல்வத்தை தீர்த்துக் கட்டிவிட்டு தப்பியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஆதரவற்ற தனக்கு வாழ்வளித்து மருமகளாக்கிய மாமியாரையும், பாசக்கார கணவரையும் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட காமுகி சுபஹரினியையும் , அவளது காதலனையும் போலீஸார் சிறையில் அடைத்தனர்.
போதைக்கு அடிமையாகி கொலைகார கூலிப்படையானதால் இரு மாணவர்களின் எதிர்காலமும் சீரழிந்து சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.