நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து, சுங்க கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 24 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வாகன வகைகளுக்கு ஏற்ப 5 ரூபாய் முதல் 120ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் 60 கிலோ மீட்டர் தூரத்துக்குள் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை புறவழிச்சாலையில் அமைந்துள்ள வானகரம், சூரப்பட்டு மற்றும் பட்டறைபெரும்புதூர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வரும் நிலையில், இவற்றில் ஆண்டுதோறும் சட்டவிதிகளின்படி, 24 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ஆம் தேதியும், மற்றவற்றில் செப்டம்பர் 1-ஆம் தேதியும் சுங்கக் கட்டணத்தை மாற்றியமைக்கப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.