சென்னை மாநகராட்சியின் 15 மற்றும் 16ஆவது வார்டுக்குட்பட்ட கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக அப்படியே கொசஸ்தலை ஆற்றில் கலக்கவிடுவதால், தோல் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது..
கடந்த ஆண்டு மழைகாலத்தில் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் மணலி புது நகர், எழில் நகர், வெள்ளிவாய்க்கால், இருளர்காலணி பர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குள் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. இதனை தடுக்கும் பொருட்டு நேரடியாக ஆய்வு செய்த முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆற்றின் கரையை பலப்படுத்த உத்தரவிட்டார். அதன்பேரில் கொசஸ்தலை ஆற்றின் கரையை பலப்படுத்தும் முதற்கட்டபணிகள் ஒரு சில இடங்களில் முடிவடைந்துள்ளன.
வெள்ள நீர் தேங்கிய இடங்களில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளும் விறு விறுப்பாக நடந்துவருகின்றது. இந்த நிலையில் மணலி புது நகரில் உள்ள பாதாளச்சாக்கடை கழிவுநீர் அனைத்தும் சுத்திகரிக்கப்படாமல் கொசஸ்தலை ஆற்றில் நேரடியாக கலக்கவிடப்படுவதாக கூறும் பொதுமக்கள் நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த கழிவு நீர் கலந்த ஆற்றில் பிடிக்கப்படும் மீன்களை உண்பதாலும் நோய் பரவும் வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் உள்ள கழிவு நீர் அனைத்தும் பாதாளசாக்கடை குழாய்கள் மூலம் கொடுங்கையூர், கோயம்பேடு, வில்லிவாக்கம், நெசப்பாக்கம், பெருங்குடி பகுதிகளில் உள்ள 9 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் நாள் ஒன்றுக்கு 486 மில்லியன் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்ட பின்னர் கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலில் கலக்கவிடப்படுகின்றது.
அப்படி இருக்க மணலி புது நகர் பகுதியில் மட்டும் கழிவு நீர் நேரடியாக ஆற்றில் திறந்துவிடப்படுவது குறித்து மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடியிடம் கேட்டபோது, எந்த ஆற்றிலும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை நேரடியாக திறந்து விடக்கூடாது அப்படி செய்யப்படுவது உறுதியானால் உடனடியாக அதனை நிறுத்தி மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.