வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பத்தரை சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம், மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது.
எந்த ஒரு பிரிவினருக்கும் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என குறிப்பிட்ட நீதிபதிகள், அதற்கான நியாயமான, அறிவியல் பூர்வமான தகவல்களை அளிக்க வேண்டியது கடமை எனவும் சுட்டிக்காட்டினர்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஜனார்தனன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையில் போதுமான தரவுகளோ, முறையான காரணங்களோ இல்லாத நிலையில், அந்த பரிந்துரை அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசும், பா.ம.க.வும் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகளை தள்ளுபடி செய்ததோடு, சாதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கருத்து தெரிவித்தனர்.