மாம்பாக்கம் அரசு பள்ளிக்கூடத்துக்கு அரையும் குறையுமாக வெட்டிய ஹேர் ஸ்டைலுடன் ரவுடிகள் போல வலம் வந்த மாணவர்களுக்கு , ஊராட்சி தலைவரின் ஏற்பாட்டின் பேரில் பள்ளியில் வைத்தே ஒழுக்கமாக ஹேர் கட்ட்டிங் செய்து விடப்பட்டது.
திருப்போரூர் ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பள்ளிக்கூடங்களுக்கு சென்ற மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் வீராசாமி என்பவர் இரு பள்ளிக்கூடங்களுக்கும் சென்று பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மாவட்ட அளவில் 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பெற்று வரும் இந்த பள்ளி மாணவர்களில் சிலர் தலைமுடியை ஒழுங்காக வெட்டாமல் ஸ்டைல் என்ற பெயரில் ரவுடிகளை போல பள்ளியில் சுற்றிக் கொண் டிருப்பது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டார். இதுகுறித்து பெற்றோர்களிடம் பலமுறை தெரிவித்தும் மாணவர்கள் இது போன்றுதான் யாருக்கும் அடங்காமல் வருகின்றனர் என ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தார்.
இதையடுத்து, மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து பேசிய ஊராட்சி தலைவர் வீரா, நீங்கள் சம்மதித்தால் பள்ளி வளாகத்திலேயே முடிதிருத்தும் தொழிலாளர்களை கொண்டு போலீஸ் கட்டிங்போல் ஒழுக்கமாக முடி வெட்டி விட உதவி செய்வதாக தெரிவித்தார்.
ஊராட்சி தலைவரின் முயற்சிக்கு பெற்றோர் முழு சம்மதம் தெரிவித்ததையடுத்து பள்ளி வளாகத்தில் முடித்திருத்தும் கலைஞர்கள் 10க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டு 300 மாணவர்களையும் ஒருவர் பின் ஒருவராக அமரவைத்து ஒழுக்கமான முறையில் முடி வெட்டி விடப்பட்டது.
அப்போது ஒரு மாணவர் தலைமேல் புதர் போல வைத்திருந்த முடியை வெட்ட விடாமல் அடம்பிடித்தார். அவரை தலைமை ஆசிரியை மற்றும் போலீஸ் காரர் பிடித்துக் கொள்ள சிரமத்துக்கிடையே அந்த தலைப்புதர் அகற்றப்பட்டது
இதுபோல் மாணவர்களின் கை, கால்களில் இருந்த நகங்களும் வெட்டி சுத்தம் செய்யப்பட்டது. கீரிக்குட்டிகள் போல சுற்றிய மாணவர்களை முடித்திருத்தம் செய்து அவர்களது கையில் ஆளுக்கொரு குளிர்பானம் அன்பு பரிசாக கொடுத்து அனுப்பி வைத்தனர்.
ஒழுக்கம் கல்வியின் மகுடமாக இருக்கும் வரை மட்டுமே மாணவர்களின் கல்வி பயனைத்தரும் இல்லையேல் இடும்பை தந்து சமூகத்தில் இழிவை தேடித்தரும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.