ஆம்பூர் அருகே உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட பெண்ணுடன் பிரச்சாரத்திற்கு சென்றபோது எடுத்த செல்பி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டிய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஷகில் என்பவரின் மனைவி ரோஷன் . இவர் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தண்ணீர் குழாய் சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
இந்நிலையில் வாக்குச் சேகரிப்புப் பணியின்போது ரெட்டி தோப்பு பகுதியைச் சேர்ந்த சதாம் என்பவருடன் ரோஷனுக்கு அறிமுகமாகி உள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண் வேட்பாளர் ரோஷனுடன், தனித்தனியாக சதாம் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரோஷனை செல்போனில் தொடர்பு கொண்ட சதாம் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும் பணத்தை கொடுக்காவிட்டால் தேர்தல் சமயத்தின் போது இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலை தளங்களில் பதிவேற்றி விடுவேன் எனக் கூறி மிரட்டல் விடுத்து கடந்த 15 நாட்களாக கொஞ்சம், கொஞ்சமாக பணத்தை பறித்து வந்துள்ளான்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரோஷனை தொடர்பு கொண்ட சதாம் 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.மேலும் பணத்தை கேட்டு ரோஷனின் வீட்டுக்கே சென்று சதாம் மிரட்டல் விடுத்ததோடு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்து உள்ளார்.
அப்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மூன்று பேருக்கும் சதாமிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சதாமின் செல்போனை பிடுங்கி கொண்டு அனுப்பி உள்ளனர்
இந்த நிலையில் செல்போனில் இருந்த புகைப்படங்களை பார்த்த இஸ்மாயில் மற்றும் முகமது ஷைனு ஆகியோர் சதாமை போலவே பெண் வேட்பாளர் ரோஷனிடம் வெள்ளிக்கிழமை இரவு பணத்தை கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ரோஷனிடம் பணம் பறிக்கும் நோக்கில் மீண்டும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்கு வந்த சதாம் இடம் இஸ்மாயில், முகம்மது ஷைனு ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் நகர காவல் துறையினர் அங்கு தகராறு ஈடுபட்டுக்கொண்டிருந்த சதாம், இஸ்மாயில், முகமது ஜைனு, ஆகி வரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பிளாம்மெயிலர்களிடம் சிக்கிய பெண் வேட்பாளர் ரோஷன் அளித்த புகாரின் பேரில் சதாம் , இஸ்மாயில் முகம்மது ஜைனு ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.
பெண்வேட்பாளருடன் எடுத்த செல்பியை வைத்து லட்சாதிபதியாக திட்டமிட்ட பிளாக்மெயிலர்ஸ் மூவரும் ஜெயிலில் கம்பி எண்ணி வருகின்றனர்.