பட்ஜெட் மீதான விவாதத்தின் போது நிதியமைச்சர் அவையில் இருக்க வேண்டும் என்பது மரபு எனவும், ஆனால், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவை மரபை மீறி செயல்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சித் துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிக் கொண்டிருக்கும் போதே நிதியமைச்சர் பி.டி.ஆர். அவையை விட்டு வெளியேறினார்.
இதனை குறிப்பிட்டு இன்றைய தினமும் எடப்பாடி பழனிசாமி அவையில் பேச முயன்றார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுக்கவே, நிதியமைச்சரின் பதிலுரையை புறக்கணித்து பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை அவமதிக்கும் வகையில் நிதியமைச்சர் செயல்பட்டதாக கூறினார்.
இதனிடையே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அலுவல் பணிக்காக தான் அவையை விட்டு வெளியேறியதாக சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்துள்ளார்.