பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மாநிலப் பட்டியலில் இணைக்க வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் கலை அறிவியல் உள்ளிட்ட இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விடுத்துள்ள அறிக்கையில், நாடு தழுவிய ஒற்றை நுழைவுத் தேர்வு என்பது சமூக, பொருளாதார, வேலைவாய்ப்பில் சமமற்ற வளர்ச்சியுள்ள நமது நாட்டில் அனைவருக்கும் சமமான வய்ப்பினை வழங்காது என்று தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை எதிர்த்து தமிழக அரசு போராடி வரும் நிலையில் கலை அறிவியல் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனவே பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பினை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமைச்சர் பொன்முடி வலியுறுத்தி உள்ளார்.