வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், 27-ந் தேதிவரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றும், நாளையும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பகல் நேர வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, மியான்மரில் கரையைக் கடந்த நிலையில், இது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.