தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனை மறு ஆய்வு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ததாக 167 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படுவதாக கூறினாலும், அவை தொடர்ந்து கிடைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் பிளாஸ்டிக் பொருட்கள் வருவதை முழுமையாக தடுக்க எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்த நீதிபதிகள் அறிவுறுத்தினர்.