கோயம்புத்தூரின் நீராதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் அடுத்து வரும் மழைக்காலம் வரை குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த கோவை மாநகராட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அணையின் பாதுகாப்பை காரணம் காட்டி, கடந்த 3 ஆண்டுகளாக கேரள நீர்ப்பாசனத் துறை, சிறுவாணி அணை முழு கொள்ளவை அடைய அனுமதிப்பதில்லை எனவும், அதனால் அணையில் இருந்து வரும் நீரின் அளவு 9 கோடி லிட்டரில் இருந்து 6 கோடி லிட்டராக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை நேர் செய்யும் பொருட்டு பில்லூர் குடிநீர் திட்டத்தில் இருந்து கூடுதலாக நீர் எடுக்கப்பட்டு வருவதாக ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.