விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சிக்கு 15 லட்சம் ரூபாய் வரி பாக்கி செலுத்தாத பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை நகராட்சி அதிகாரிகள் ஜப்தி செய்தனர்.
திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி செலுத்தாதவர்கள், உடனடியாக வரி செலுத்த வேண்டுமென தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தது.
அந்த வகையில், தொழில் வரி மற்றும் செல்போன் டவர் அமைப்பதற்கான வரி என சுமார் 15 லட்சம் ரூபாய் வரி பாக்கி செலுத்தாத பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு கடந்த 9ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாததால், நகராட்சி அதிகாரிகள் அலுவலகத்தை ஜப்தி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்நிறுவன ஊழியர்களுக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து போலீசார் உதவியுடன் அலுவலகத்தில் இருந்த நாற்காலி, டேபிள், பெஞ்ச் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் நகராட்சி அலுவலர்கள் ஜப்தி செய்து, வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.