வானிலை நிலவரத்தைத் துல்லியமாகக் கணிக்கும் மேம்பாட்டுப் பணிகளுக்காக 10 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிலையில், அதில் முக்கிய அம்சமாக வானிலை பலூனும் இடம்பெற்றுள்ளது.
சிந்த்தட்டிக் ரப்பரால் செய்யப்பட்ட பலூனில் ஹீலியம் அல்லது நைட்ரஜன் வாயுவை நிரப்பி, அதன் வால் பகுதியில் "ரேடியோசாண்ட்" என்ற கருவியை இணைத்து, வானில் பறக்கவிடுவர்.
இந்த பலூன் சுமார் ஒரு லட்சம் அடி உயரம் வரை செல்லும் என்று கூறப்படும் நிலையில், "ரேடியோசாண்ட்" கருவி வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதம், வெப்பநிலை, காற்றின் திசை உட்பட பல்வேறு விஷயங்களை துல்லியமாகக் கணித்து, டிரான்ஸ்மீட்டர் வழியே பூமிக்குத் தகவல்களை அனுப்பும்.
இதன் மூலம் வானிலை நிலவரத்தை கூடுமான அளவில் துல்லியமாக கணிக்க முடியும். காலை மாலை என ஒரு நாளைக்கு இரு வேளை பலூன் இயக்கப்படும். ஒரு பலூனை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையில், "ரேடியோசாண்ட்" கருவி மீண்டும் கைக்கு கிடைப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது.