புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்கப்படுவது குறித்து புகாரளித்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியை காவல் நிலையத்தில் வைத்து தாக்கியதாக மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கவரப்பட்டியைச் சேர்ந்த ஷங்கர் என்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி, கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக செல்போனில் எஸ்.பி.அலுவலகத்திற்கு புகாரளித்துள்ளார். புகார் குறித்து விசாரிக்குமாறு எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து விராலிமலை காவல் நிலையத்திற்கு உத்தரவு சென்றதை அடுத்து, ஷங்கரை தொடர்பு கொண்டு, பெண் காவலர் ஒருவர் தகவல் கேட்டிருக்கிறார்.
இதனிடையே, அங்கு பணிபுரியும் செந்தில், பிரபு, அசோக் ஆகிய மூவரும் ஷங்கரின் வீட்டுக்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, வாகனத்தில் ஏற்றி வந்து, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள மரத்தில் சாய்த்து வைத்து, லத்தியாலும், பூட்ஸ் காலாலும் தாக்கியதாக சொல்லப்படுகிறது. பலத்த காயமடைந்த ஷங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன், புதுக்கோட்டை எஸ்.பி நிஷா பார்த்திபன் ஆகியோரது உத்தரவின்பேரில் 3 போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.