முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன், உச்சநீதிமன்ற உத்தரவின் படி இன்று ஜாமீனில் வெளியே வந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் 9 மாதங்களாக பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து, பரோலை ரத்து செய்ய கடந்த 11ம் தேதி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், அப்போது உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவின் நகல் சிறை அதிகாரிகளுக்கு கிடைக்காததால் அவர் மீண்டும் பரோலில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி ஜாமீன் பெற இன்று காலை மீண்டும் பேரறிவாளன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஜாமீன் நகலை ஆய்வு செய்த பிறகு அதிகாரிகள் அவரை ஜாமீனில் விடுவிடுத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் ஆரத்தழுவி வரவேற்றார்.