தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கல்லூரி பேராசிரியர்கள் திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவத்தில், பேராசிரியர்கள் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த கணேசன் - மாடத்தி தம்பதியின் மூத்த மகள் இந்து பிரியா, புளியங்குடி மனோ கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். கல்லூரிக்கு செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தடையை மீறி சில மாணவிகள் செல்போனை கொண்டு சென்றுள்ளனர்.
அதனை இந்து பிரியா வாங்கி பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த பேராசிரியர்கள் முத்துமணியும், வளர்மதியும் மாணவியை திட்டி மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்குமாறு கூறியிருக்கின்றனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி, தனது தற்கொலைக்கு பேராசிரியர்கள் தான் காரணம் என கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தை கைப்பற்றிய போலீசார், பிற மாணவர்களிடம் விசாரித்ததில் பேராசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்களை கைது செய்தனர்.