கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பேருந்தில் அழைத்து வரப்பட்ட ஆயுள் தண்டனைக் கைதி ஒருவன், நள்ளிரவில் போலீசாரின் ஆழ்ந்த உறக்கத்தைப் பயன்படுத்தி தப்பியோடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகவேல் கொலைக்குற்ற வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். கரூர் காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆயுதப்படை காவலர்கள் 3 பேர் அவனை வெள்ளிக்கிழமை காலை அரவக்குறிச்சி அழைத்துச் சென்றுள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விட்டு அரசுப் பேருந்தில் மீண்டும் கடலூர் அழைத்துச் சென்றுள்ளனர். நள்ளிரவு 2 மணியளவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போலீசார், தியாகதுருகம் அடுத்த மாடூர் சுங்கச்சாவடி அருகே திடீரென கண்விழித்துப் பார்த்தபோது முருகவேலைக் காணாமல் அதிர்ச்சியடைந்தனர்.
அப்போதுதான் அவன் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.