திருப்பூர் மாவட்டம் கேத்தனூரில் பொதுத்துறை வங்கியில் அடகு வைத்த தங்க நகையில் சில கண்ணிகளை நகை மதிப்பீட்டாளர் வெட்டி எடுத்து எடுத்துள்ளதாக வாடிக்கையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் சல்லிப்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் 45 கிராம் 520 மில்லி கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியைக் கடந்த ஆண்டு அடகு வைத்துள்ளார்.
அடகுச் சீட்டில் நகையின் எடை 44 கிராம் 700 மில்லி கிராம் எனக் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்காமல் கோவிந்தராஜ் கையொப்பமிட்டுக் கடன் பெற்றுள்ளார்.
நேற்றுக் கடனைத் திருப்பிச் செலுத்தி நகையை மீட்ட கோவிந்தராஜ் வீட்டுக்குச் சென்று அதைப் பார்த்தபோது சங்கிலியில் சில கண்ணிகள் குறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து வங்கி மேலாளரிடம் அவர் புகார் அளித்ததால் நகை மதிப்பீட்டாளரிடம் விசாரித்துள்ளனர்.
நகையின் எடை குறைய வாய்ப்பில்லை என அவர் முதலில் கூறியதாகவும், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்யலாம் எனக் கூறியபோது தவறு செய்ததை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தகவல் பரவியதால் நகை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் பலர் வங்கி முன் திரண்டனர். மோசடி குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் காவல்துறையினர் உறுதியளித்ததால் வாடிக்கையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த மோசடியில் நகை மதிப்பீட்டாளர் தவிர வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.