தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உயிரிழந்த மலைப்பாம்பை கையில் பிடித்து வீடியோ எடுத்து வெளியிட்ட சினேக் பாபு வனத்துறையின் பிடியில் சிக்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள வாழவல்லான் கிராமத்தில் மலைப்பாம்பு ஒன்று சாலையோரத்தில் அசைவின்றி கிடந்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது அந்த மலைப்பாம்பு இறந்து கிடந்தது தெரியவந்தது.
மலைப்பம்பு இறந்து கிடந்ததைப் பார்ப்பதற்காக அப்பகுதி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர். அப்போது அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த 'புரட்சித் தளபதி' ஒருவர் தனது பராக்கிரமத்தை காட்டுவதற்காக மலைப்பாம்பை உயிருடன் பிடித்தது போல இறந்த பாம்பின் தலையை கொத்தாக பிடித்து கொண்டு வீடியோ எடுத்துள்ளார்
அந்த உயிரற்ற பாம்புடன் நின்றபடியே போஸ் கொடுத்த ஸ்னேக் பாபு உயிருள்ள பாம்பை பிடித்தது போன்று வீடியோவாக பதிவுசெய்து, அந்த வீடியோவிற்கு மங்காத்தா படத்தின் பின்னணி இசையை சேர்த்து, அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.
இறந்து கிடந்த மலை பாம்பை பரிசோதனைக்காக கொண்டு சென்ற வனத்துறையினர் இந்த வீடியோ வைரலான நிலையில் பாம்புடன் போஸ் கொடுத்து கெத்துக் காட்டிய ஆசாமியை பிடித்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
அதே போல கர்நாடக மாநிலம் கார்வார் பகுதியில் சுமார் 12 அடி நீளமுள்ள பெரிய அளவிலான மலைபாம்பு ஒன்று இரவு நேரத்தில் சாலையை கடந்து செல்லும் காட்சியை அந்தவழியாக சென்ற இளைஞர் ஒருவர் படம் பிடித்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த மலைப்பாம்பு வீடியோ நாமக்கல் பகுதியில் எடுக்கப்பட்டது என்றும் நெல்லை சிங்கிக்குளம் என்றும் சமூக வலைதளங்களில் சிலர் வதந்தி பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.