பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் வாக்கிற்கு இணங்க, ஆண்களுக்கு சரிநிகர் சமமாய் நிற்கும் பெண்களுக்கான தினம் இன்று. இந்த நாளின் சிறப்பை விளக்கும் செய்தித் தொகுப்பை தற்போது காண்போம்..
சர்வதேச பெண்கள் தினம் என்று ஏதோ ஒப்புக்காக அறிவித்துவிடவில்லை ஐக்கிய நாடுகள் சபை. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று முக்கொள்கையை வலியுறுத்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக சமஉரிமை கேட்டு அந்நாட்டு பெண்கள் 1789ம் ஆண்டு முதன் முதலில் போராட்டத்தில் இறங்கினர்.
ஆண்களுக்கு நிகரான உரிமைகள், வேலைக்கேற்ற ஊதியம், பெண்களுக்கும் வாக்குரிமை என்று அடிப்படை உரிமைகளைக் கேட்டு பாரீஸ் நகர வீதிகளில் போராட்டக் குரல்கள் ஒலித்தன. மற்ற நாடுகளில் சுதந்திரம் கேட்டு பெண்கள் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பேரரசி ரஷியா சுல்தானா என்பவர் இந்திய தேசத்தை ஆட்சி செய்திருந்தார். ஆனால் பின்வந்த காலங்களில் பெண்களின் உரிமையும், சமூக நீதியும் மறுக்கப்பட்டே வந்தன.
சதி எனப்படும் உடன்கட்டை ஏறுதல், சொத்து மறுப்பு, உரிமை மீறல் என பெண்களுக்கான அடக்குமுறை மேலோங்கி, பின் அடங்கி விட, போகப்பொருளாக பெண்களைப் பார்க்கும் நிலைமை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்கிறது..
பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்ற கவிஞர்கள் பெண்ணுரிமை, பெண் கல்வி போன்றவற்றிற்கு ஆதரவாக நின்றனர்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு எனக் கேட்டவர்கள் வாய்பிளந்து நிற்குமளவிற்கு இன்று பெண்களின் முன்னேற்றம் சிகரம் தொட்டு நிற்கிறது. இன்று ஆண்கள் இருக்கும் அத்தனை துறைகளிலும் சரிநிகர் சமானமாய் வளர்ந்து வந்துள்ளனர் பெண்கள்.
இந்த வளர்ச்சிக்கு அவர்கள் கொடுத்த விலையைச் சொல்லி மாளாது. ஆனாலும் அன்னையாய், சகோதரியாய், அருமை மனைவியாய் வெவ்வேறு அவதாரங்கள் எடுக்கும் பெண்மையைப் போற்றுவோம்....