தமிழகத்தில் தயாரிக்கப்படும் கனரக வாகனங்கள், வெளிமாநிலங்களில் தற்காலிக வாகன பதிவு மேற்கொள்வதால் 52கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள போக்குவரத்து துறை ஆணையர், முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எண்ணூர், ஓசூர் உள்ளிட்ட இடங்களில் தயாரிக்கப்படும் கனரக வாகனங்களை, வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று தற்காலிக பதிவு சான்று பெற்றுவிட்டு, பின்னர் தமிழகத்தில் நிரந்தர வாகனப் பதிவு மேற்கொள்வதாகவும், இதுபோன்று ஆண்டுக்கு சுமார் 50ஆயிரம் வாகனங்கள் வெளிமாநிலங்களில் தற்காலிக பதிவு மேற்கொள்வதால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்காலிக பதிவு சான்று பெற வாகனத்தின் விலையில் இருந்து 15சதவீதம் தொகையை ஆயுள் கால வரியாக கணக்கிட்டு, அதில் 2 சதவீதம் தொகையை தற்காலிக பதிவு வரியாக மாநில அரசுக்கு செலுத்த வேண்டும் என்ற நிலையில், பெரும்பாலனோர் வெளிமாநிலங்களில் பதிவு மேற்கொள்வதால் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.