உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய தமிழக மாணவர், அங்கு உக்ரைன் ராணுவம் தங்களை எல்லையில் தடுத்து நிறுத்தி மிரட்டியதாகவும், வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி பயமுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் வெடிகுண்டு சத்தத்திற்கு மத்தியிலும், கடுங்குளிருக்கு மத்தியிலும் மரண பயத்துடன் சிக்கிய தமிழக மாணவர்கள் தாயகத்திற்கு வந்து குடும்பத்தினரையும், சொந்த பந்தத்தையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிட்டத்தட்ட மூன்று நாட்கள் அந்த பதுங்கு குழிக்குள் பதுங்கியிருந்த பின்னர் துதரகம் மூலம் ருமேனியா எல்லை வழியாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக மாணவர் கவுரி சங்கர் கூறியுள்ளார்.
உக்ரைன் எல்லையில் இருந்து வெளியேற உக்ரைனியர்களுக்கு மட்டுமே முன்னுரிமை, முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்ற அவர், தங்களை உரைனை விட்டு வெளியேற அந்நாட்டு ராணுவம் அனுமதிக்கவில்லை எனவும், அது குறித்து கேட்ட போது கூட உக்ரைன் ராணுவம் தங்களை பயமுறுத்துவதற்காக வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி தடுத்து நிறுத்தி மிரட்டியதாக பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
மைனஸ் டிகிரி கடுங்குளிரில் பல மணி நேர காத்திருப்புக்கு பின்னர் தான் உக்ரைன் ராணுவம் தங்களை நாட்டைவிட்டு வெளியேற அனுமதித்ததாகவும், சுமார் 3ஆயிரம் மாணவர்கள் அங்கேயே எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் நிர்கதியாக நின்றிருந்ததாக சோகத்தை பகிர்ந்துள்ளார்.
தங்களுக்கு ஒரு பைசா செலவு கூட இல்லாமல் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்று தாயகம் அழைத்து வந்திருப்பதாக, உக்ரைனில் 5ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த பார்கவி என்ற மாணவி தெரிவித்துள்ளார்.
மகனை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ள மாணவர் கௌரிசங்கரின் தந்தை சண்முகம், எஞ்சிய மருத்துவப் படிப்பை இந்தியாவிலேயே படிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.