செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் பின்னோக்கி இயக்க முயன்ற கண்ட்டெய்னர் லாரி மின்மாற்றியின் பக்கவாட்டில் உரசி, மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநர் எரிந்து கருகி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மீசான் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனம் ரசாயனங்களை மொத்தமாக வாங்கி, ஆர்டரின் பெயரில் மற்ற நிறுவனங்களுக்கு லாரிகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.
இந்த நிறுவனத்தில் வந்தவாசியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் கண்ட்டெய்னர் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். காலை நிறுவனத்தின் வெளியே நிறுத்தியிருந்த லாரியை பின்னோக்கி இயக்க முயன்றுள்ளார்.
அப்போது அதன் பக்கவாட்டுப் பகுதி, அருகிலிருந்த மின்மாற்றியின் இணைப்புகளின் மீது உரசி இருக்கிறது. இதில் லாரியில் பாய்ந்த உயர் மின்னழுத்த மின்சாரம், வசந்தகுமார் மீதும் பாய்ந்ததில், உடல் தீப்பற்றி எரிந்தவாறே ஓட்டுநர் இருக்கையில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
லாரியின் டயருக்கு அருகே விழுந்தவரின் உடலில் இருந்து டயருக்குப் பரவிய தீ லாரியின் முன்பக்கம் முழுவதையும் எரித்து எலும்புக்கூடாக்கியது.