திருப்பூரில் நகை அடகுக்கடைக்குள் புகுந்து சுமார் 3 கிலோ தங்கத்தைத் திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
யூனியன் மில் சாலையில் ஜெயக்குமார் என்பவர் "ஜே.கே, ஜுவல்லரி மற்றும் அடகுக் கடை" நடத்தி வருகிறார். காலையில் வழக்கம்போல் கடையைத் திறந்து பார்த்தபோது உள்ளிருந்த தங்க நகைகள், வெள்ளி நகைகள், பணம் உள்ளிட்டவை திருடிச் செல்லப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
கடையோடு ஒட்டியுள்ள தனது வீட்டை புதுப்பித்து வரும் ஜெயக்குமார், தற்காலிகமாக வேறு இடத்தில் தங்கியுள்ளார். அந்த வீட்டின் பூட்டை உடைத்துவிட்டுதான் திருடர்கள் உள்ளே நுழைந்துள்ளதாகக் கூறும் ஜெயக்குமார், 3 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி, 25 லட்சம் ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர் என போலீசில் புகாரளித்துள்ளார்.
கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா டிஸ்க்கையும் திருடர்கள் தூக்கிச் சென்றுவிட்டதாகக் கூறப்படும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.