செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

21 மாநகராட்சிகளில் மேயர்கள் பதவியேற்பு... வெற்றி வாகை சூடிய திமுக!

Mar 04, 2022 09:40:11 PM

சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 21 மாநகராட்சிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மேயராக வெற்றி பெற்று பதவியேற்றுக் கொண்டனர். பல இடங்களில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், சில இடங்களில் போட்டி வேட்பாளர்களை வீழ்த்தி திமுக வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடினர்.

தமிழகத்தில் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது.

சென்னை மாநகராட்சியின் 49ஆவது மேயராக திமுக சார்பில் போட்டியிட்ட பிரியா ராஜன் மட்டும் வேபுமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலின பெண் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ள பிரியா ராஜன், 29வயதே ஆன இளம் மேயர் என்ற கூடுதல் சிறப்பையும் பெற்றிருக்கிறார். ரிப்பன் மாளிகையின் மாமன்ற அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முறைப்படி ஆணையர் ககன் தீப் சிங் பேடி பிரியா ராஜனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரியா ராஜனும் உறுதிமொழியை வாசித்து பதவியேற்றுக் கொண்டார்.

இதையடுத்து பிரியாவுக்கு ஆணையர் வாழ்த்துத் தெரிவித்து மேயருக்கான அங்கியையும், தங்க ஆரத்தையும் வழங்கினார். அதன்பின்னர் சென்னை மேயர் இருக்கையில் பிரியாவை அமரவைத்து அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் வெள்ளி செங்கோலை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

கோவை மாநகராட்சி மேயராக திமுகவின் கல்பனா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி செங்கோல் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். கோவை மாநகராட்சியின் முதல் பெண்மேயராக கல்பனா பதவியேற்றிருக்கிறார்.

சேலம் மாநகராட்சி மேயராக திமுகவின் ராமச்சந்திரன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.

மதுரை மாநகராட்சியிலும் திமுக சார்பில் போட்டியிட்ட இந்திராணி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில், ஆணையர் இந்திராணிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

திருச்சி மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்பழகன் ஒருமனதாக தேர்வாகி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

அன்பழகன் ஏற்கனவே திருச்சி மாநகராட்சியின் துணை மேயராக பொறுப்பில் இருந்தவர் ஆவார். திருச்சி மாநகராட்சி இதுவரை மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு தான் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

அந்த வகையில், திருச்சி, மாநகராட்சியாக மாறிய 25 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக ஆண் ஒருவர் மேயராக பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக வசந்தகுமாரியும், அதே போல காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயராக மகாலட்சுமி யுவராஜும் பதவியேற்றுக் கொண்டனர்.

இருவரும் முதல் பெண் மேயர் என்ற பெருமையையும் பெற்றிருக்கின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மகாலட்சுமியை எதிர்த்து, அதே கட்சியைச் சேர்ந்த சூர்யா சோபன் குமார் போட்டியிட்ட நிலையில், 29 வாக்குகள் பெற்று போட்டி வேட்பாளர் சூர்யாவை வீழ்த்தி மகாலட்சுமி வெற்றி பெற்றார்.

ஆவடி மாநகராட்சி மேயராக 9வது வார்டில் போட்டியிட்டு மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட உதயகுமார் பதவியேற்றுக் கொண்டார்.

கரூர் மாநகராட்சி மேயராக திமுகவின் கவிதா கணேசன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஆணையர் ரவிச்சந்திரன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

கடலூர் மாநகராட்சியில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுந்தரியை எதிர்த்து, அதே கட்சியைச் சேர்ந்த கீதா குணசேகரன் என்பவரும் போட்டியிட்டதால் கடும் போட்டி நிலவியது.

வாக்கெடுப்பில், சுந்தரிக்கு 19 வாக்குகளும், கீதா குணசேகரனுக்கு 12 வாக்குகளும் கிடைத்தன. இதனையடுத்து, திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுந்தரி கடலூர் மாநகராட்சியின் மேயராக அறிவிக்கப்பட்டார்.

45 வார்டுகளை உள்ளடக்கிய ஓசூர் மாநகராட்சியில் மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான சத்யாவும், அதிமுக சார்பில் நாராயணனும் போட்டியிட்ட நிலையில், திமுக கவுன்சிலர்கள் மற்றும் 5 சுயேட்சைகள் ஆதரவுடன் 27 வாக்குகள் பெற்று திமுகவின் சதியா வெற்றி பெற்றார். சத்யா முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் திமுக சார்பில் மகேஷும், பா.ஜ.க. சார்பில் மீனா தேவ் என்பவரும் போட்டியிட்டனர். 28 வாக்குகள் பெற்ற திமுகவின் மகேஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பாஜகவின் மீனா தேவ் 24 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் மேயர் பதவிக்கான தேர்தலில் திமுக சார்பில் ராமநாதனும், அதிமுக சார்பில் மணிகண்டனும் போட்டியிட்டனர். அமமுக, பா.ஜ.க., சுயேட்சை கவுன்சிலர்கள் அதிமுகவின் மணிகண்டனுக்கு ஆதரவு அளித்தனர். ஆனாலும், அவர் 11 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். இதனையடுத்து ராமநாதன் 39 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஈரோடு மாநகராட்சியின் மேயராக நாகரெத்தினமும், நெல்லை மாநகராட்சி மேயராக சரவணனும், சிவகாசி மாநகராட்சி மேயராக சங்கீதா இன்பமும், தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகனும், திருப்பூர் மாநகராட்சி மேயராக தினேஷ்குமாரும், வேலூர் மாநகராட்சி மேயராக சுஜாதா அனந்தகுமாரும், திண்டுக்கல் மாநகராட்சி மேயராகவும், முதல் பெண் மேயராகவும் இளமதியும் போட்டியின்றி தேர்வாகி பதவியேற்றுக் கொண்டனர்.

கும்பகோணம் மாநகராட்சி திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட சரவணன், போட்டியின்றி தேர்வாகி பதவியேற்றுக் கொண்டார். ஆட்டோ ஓட்டுநராக இருந்த சரவணன் கும்பகோணம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

கோவை மாவட்டம் வெள்ளலூரில் அதிமுக - திமுகவினரிடையே மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாக்குப் பெட்டி வெளியே வீசி எறியப்பட்ட நிலையில், பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டன.

15 வார்டுகள் கொண்ட வெள்ளலூர் பேரூராட்சியில் அதிமுக 8 இடங்களிலும் திமுக 6 இடங்களிலும் சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். காலை நடைபெறவிருந்த தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலின்போது, திமுக - அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து மதியம் நடைபெறவிருந்த துணைத் தலைவர் தேர்தலின்போதும் இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு, வாக்குப்பெட்டி தூக்கி வெளியே வீசப்பட்டது. இதனால் துணைத் தலைவர் தேர்தலும் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக திமுக சார்பில் புகாரளிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பிலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனுவை அளித்தனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பங்கேற்காததால், தேர்தலை தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 8 வார்டுகளில் தி.மு.க. 4, அ.தி.மு.க. 4 என வெற்றி பெற்று சமபலத்தில் உள்ள நிலையில், தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறவிருந்தது.

தேர்தல் நடத்த 50 விழுக்காடு உறுப்பினர்களுக்கு மேல் இருக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், 4 உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்ததால் தேர்தலை தள்ளிவைப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

செங்கல்பட்டு நகராட்சியில் திமுகவின் தேன்மொழி நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, 2-வது முறையாக செங்கல்பட்டு நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. மறைமலைநகர் நகராட்சியிலும் திமுக வேட்பாளர் சண்முகம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மறைமலைநகர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட 30 ஆண்டுகளில் முதன்முறையாக நகர்மன்ற தலைவர் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது. கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவராக திமுகவின் கார்த்திக் தண்டபாணி போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் மன்ற தலைவராக 21ஆவது வார்டில் வெற்றி பெற்ற சுந்தர லட்சுமியும், துணை தலைவராக பழனிசாமியும் போட்டியின்றி தேர்வாகினர். சாத்தூர் நகர்மன்ற தலைவராக போட்டியின்றி தேர்வான திமுகவின் எஸ். குருசாமிக்கு ஆணையர் நித்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதேபோல சாத்தூர் நகராட்சிக்கான துணை தலைவர் பதவிக்கும் திமுகவின் அசோக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் திமுக சார்பில் ஜலாலும், அதிமுக சார்பில் அம்பிகாவும் போட்டியிட்ட நிலையில், 18 வாக்குக்கள் பெற்று நகர்மன்ற தலைவராக திமுகவின் ஜலால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியின் தலைவராக திமுகவின் நாகராஜ் போட்டியின்றி தேர்வானார். 1949ஆம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், சுமார் 73 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக நகர்மன்ற தலைவர் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது.

சத்தியமங்கலம் நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஜானகி ராமசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

 

கோவை வால்பாறை நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் காமாட்சி கணேசனை எதிர்த்து அதே கட்சியைச் சேர்ந்த அழகு சுந்தரவள்ளி என்பவர் போட்டியிட்டதால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் நகர் மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட அருள்வடிவு வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், மற்றொரு கவுன்சிலரான மெஹரீபா பர்வீன் வேட்புமனுவை தாக்கல் செய்து 24 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

விழுப்புரம் நகர் மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி போட்டியின்றி தேர்வாகினார். நூறாண்டு கண்ட நகராட்சியில் முதல் பெண் நகர் மன்றத் தலைவராக தமிழ்ச்செல்வி தேர்வாகினார். அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் தமிழ்ச்செல்விக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அதேபோல, திண்டிவனம் நகர்மன்ற தலைவராக நிர்மலா ரவிச்சந்திரனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

 

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் திமுகவின் சுமிதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோன்று, பெரியகுளம் பகுதியிலுள்ள தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, வடுகப்பட்டி, தாமரைக்குளம், தென்கரை ஆகிய ஐந்து பேரூராட்சிகளிலும் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி பேரூராட்சித் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

 

 

 

 

 


Advertisement
வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு 4 வயது குழந்தை உயிரிழப்பு
ஆந்திர மாநில பக்தர்கள் வந்திருந்த பேருந்தில் ஏறி திருட முயற்சி... போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்
அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்
15 இரும்பு சத்து மாத்திரைகளை ஒரே நேரத்தில் உண்ட பள்ளி மாணவன்
கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்
காரைக்குடி விமான நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர்நீதிமன்றம்
நெல்லை அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆதரவாளர்களிடையே கைகலப்பு
ஆற்றில் நீரெடுக்கும் தண்ணீர் தொட்டியில் உறங்கும் முதலை... முதலையைப் பிடித்து செல்ல வனத்துறையிடம் கோரிக்கை
மண்டல அளவிலான உயர்கல்வித்துறை பங்களிப்போர் கலந்தாய்வு கூட்டம்
நடிகை சீதா வீட்டில் நகை திருடு போன விவகாரம் குறித்து போலீசார் விசாரணை

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement