டியூஷன் சென்டர்கள் நடத்தும் மற்றும் வீடுகளிலேயே டியூசன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதற்காக மாவட்டந்தோறும் சிறப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சையைச் சேர்ந்த ராதா என்ற ஆசிரியை தனது இடமாறுதல் கோரிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அதன் விசாரணையில்,ஆசிரியர்களுக்கான வேலை நேரம் குறைவானது என்பதால் டியூசன் எடுப்பதை பகுதிநேர பணியாக அவர்கள் செய்வதாக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் குறிப்பிட்டார்.
டியூசன் எடுப்பது போன்ற செயல், ஆசிரியர் சமூகத்தில் புற்றுநோய் போல பரவி, பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் பேராசையை அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இவை தொடர அனுமதித்தால் ஆசிரியர்களின் பணியில் மேம்பாடு மற்றும் பணி பக்தியை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என நீதிபதி கூறினார்.