விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சீரமைப்பு பணியின் காரணமாக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் மண்சாலையில் கரும்பு லோடு ஏற்றிச் சென்ற லாரி சிக்கிக் கொண்டதால், திருவண்ணாமலை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாலும், பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாலும், வாகனங்கள் செல்ல ஏதுவாக சிறுவாடி காப்புக்காடு பகுதியில் தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி, அதிக பாரத்தால் மண்சாலையில் சிக்கிக் கொண்டது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து, ஜேசிபி எந்திரம் மூலம் லாரி மீட்கப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.