தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளும், 134 நகராட்சிகளும் தி.மு.க. வசமாகி உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 138 நகராட்சிகளில் 137 நகராட்சிகளிலும் பெரும்பான்மை பலத்துடன் திமுக வெற்றிக் கனியை பறித்திருக்கிறது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையை மட்டும் அதிமுகவிடம் இழந்துள்ளது திமுக.
செங்கோட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 24 வார்டில் அதிமுக 10 வார்டுகளிலும், திமுக 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக 3 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும், சுயேச்சைகள் 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
பல மாவட்டங்களில் மொத்த நகராட்சிகளும் திமுகவின் கோட்டையாக மாறியுள்ளன. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, பள்ளப்பட்டி, புகழூர் ஆகிய 3 நகராட்சிகள், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்றத்தூர், மாங்காடு ஆகிய இரண்டு நகராட்சிகள், கிருஷ்ணகிரி நகராட்சி, கோவையில் கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், பொள்ளாச்சி, மதுக்கரை, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய ஏழு நகராட்சிகள், செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு, நந்திவரம் கூடுவாஞ்சேரி, மதுராந்தகம், மறைமலைநகர் ஆகிய நான்கு நகராட்சிகளையும் திமுக மொத்தமாகக் கைப்பற்றியுள்ளது.
தர்மபுரியில் தர்மபுரி நகராட்சியையும் திருவாரூரில் கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மன்னார்குடி ஆகிய நான்கு நகராட்சிகளையும் நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம், குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய நான்கு நகராட்சிகளையும் கைப்பற்றியுள்ள திமுக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், மேல்விஷாரம், வாலாஜாபேட்டை ஆகிய நகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சாத்தூர், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஐந்து நகராட்சிகளையும் வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஆகிய இரண்டு நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.